வாடகை வீடு விட்டு புதிய வீட்டுக்கு வந்தபோது
வேலிக்கு வெளியே சின்ன உருவமாய்பச்சைக் கண்களால் என்னை வசீகரித்தாய்
வீடமைப்பாளரின் உபயமாய் எல்லா வீடுகளிலும்
உன் உறவுகள்
யாரும் நெருங்கமுடியாதபடி உன் உடலெங்கும்
ஊசிகளாய் முட்கள் தெரிந்தன
உனைத்தடவத் துடிக்கும் விரல்களை
அவை தடுத்தன
ஆயினும் அவ்வப்போது என் வாயிதழ்களில்
உனைநோக்கி அன்பு மொழிகள் கசியும்
அம்மா சொல்லித்தான் உன் திருநாமம்
கல்யாண முருங்கை என்றறிந்தேன்
பக்கத்து வீடுகளில் பழ மரங்கள்
அழகு காட்ட.. நீ உடல் நீண்டாய்
வேலி தாண்டி உள்ளே நிழல் பரப்பினாய்
வீட்டுக்கு வெளியே எடுத்த படங்களில்
எங்களுக்குப் பின்னால் நின்ற
உன் பசுமைச் சிணுங்கல் பதிவானது
“ரெண்டு பழமரத்த நட்டிருந்தா
ஏதும் பலன் கிடைச்சிருக்குமே”
அம்மாவின் அங்கலாய்ப்பு தொடர்ந்தது
பெயர் தெரியாத பறவைகளுக்கு
உன் இடஒதுக்கீட்டுக் கொள்கை
எனக்குப் பிடித்திருந்தது
வெளியே போய்வந்தால் காத்திருந்து
எங்களை முதலில் வரவேற்பாய்
ஒருநாள் மனைவியின் நச்சரிப்பு தாளாமல்
ரம்பம் கொண்டு உன் உடல் அவயங்களை
ஒவ்வொன்றாக அறுக்கத் தொடங்கினேன்
அறுபட்ட இடங்களில்
மிஞ்சியிருந்த உன் வெள்ளை இரத்தம்
கசியத் தொடங்கியது
சிதறிய உன்னை அள்ளி வீசி
வேலிக்கு அப்பால் அப்புறப்படுத்தினேன்
கொலை வெறி தீராமல் உன்னை விட்டு
எங்கோ பயணப்படத் தொடங்கின
இரக்கமில்லா கரையான்கள்
No comments:
Post a Comment