நம் குரல்

Monday, February 15, 2010

கடவுளும் நானும்


1
இந்த முறை
கடவுளைச் சந்தித்து
அவர் நாமம் சொன்னபோழ்தில்
எப்போதும் அவரிதழில்
அரும்பியிருக்கும் புன்னகை வளர்ந்து
பெரும் சிரிப்பொலிக்கிடையே
திருவார் மலர்ந்தார்:
“நாமமில்லா எனக்கு
நாமம் தந்ததே மனிதர்தானே”

2
கடவுளின் கோரிக்கைகள் ஒருநாள்
என் கவனத்துக்கு வந்தன
ஒவ்வொன்றாகப் பரிசீலித்தேன்
நிற்கும் இடத்திலே
இருளின் ஆட்சியும்
உடல் நனைக்கும் வியர்வையும்
படாதபடு படுத்துவதாய்
ஒரு கோரிக்கையில்
ரொம்பவும் மனம் கசிந்திருந்தார்

3
தேர்வு எழுத
பள்ளி மண்டபத்தில்
நுழையும் தருணத்தில்
என்னுடன் உடன் வந்திருந்த
கடவுள் கைகுலுக்கி
உற்சாக உணர்வுகளை
எனக்குள் இடம் மாற்றிப்
புன்னகையோடு விடைபெற்றார்

4
கட்டுடைப்பில்
சிதறிய ஒவ்வொரு
துகள்களிலும்
கடவுளின் திருமுகம் தெரிந்தது
சிதறல்களைச் சேகரித்து
மீண்டும் கட்டுகிறேன்
முன்னைவிட அவரின் முகம்
இன்னும் பொலிவாய்..

No comments:

Post a Comment