நம் குரல்

Monday, February 15, 2010

ஐக்கூ நந்தவனத்தில் (ஐக்கூ ஆய்வு)



கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் அமைந்து நமக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கு இது மிகவும் பொருந்தும். ஹைக்கூ கவிதைகள் எனக்கு முதலில் அறிமுகமானபோது இந்தப் பழமொழிதான் என் நெஞ்சில் இனித்தது. மூன்று வரிகளில் வாழ்க்கையின் பல்வேறு காட்சிகளை அழுத்தமாய், தெளிவாய், ஆர்வமாய்க் கோடிட்டுக் காட்டும் தன்மையுடையது ஹைக்கூ.

மூன்று வரிகள் கொண்ட எளிய வடிவமாக இருந்தாலும் ஹைக்கூ நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள் பதியமிட்டுள்ளது. இந்தத் துளிப்பாக்களின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் அவற்றை வாசிப்போரைக் கவிதானுபவத்தில் மூழ்க வைக்கும் ஆற்றல் மிக்கவை எனலாம்.

“ஹைக்கூ கவிதைகளைச் செய்ய முடியாது. அவை எங்காவது தென்படும். அவற்றை அடையாளம் காண ஒரு தனிப் பார்வை வேண்டும்” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹைக்கூ பற்றிப் பிளித் என்பார் கூறியுள்ள கருத்தும் நம் சிந்தனைக்குரியது. “ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை; பாதி திறந்திருக்கும் கதவு; இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம்; பேசாமல் பேசி நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்”.

கவிதை மனங்களைக் கைது செய்யும் இந்த அற்புதமான இலக்கிய வடிவம் இனிய நண்பர் ‘இனிய நந்தவனம்’ சந்திரசேகரனையும் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. 2004இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 33 எழுத்தாளர்களோடு தமிழகம் - புதுவைக்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தின்போது சந்திரசேகரன் எனக்கு அறிமுகமானார்.

திருச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் எங்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்று அவசரமாக ஹைக்கூ நேர்காணலை நடத்தியதும் நிகழ்ச்சி முடிந்து பேருந்தில் பயணித்தபோது உடன் வந்து, ஹைக்கூ கவிதைகளை எழுதச்சொல்லி வாங்கிக்கொண்டு இடையிலே விடைபெற்றதும் என் நினைவின் பிடியில் இன்னும் இறுக்கமாகவே உள்ளன. அப்பொழுதே கவிதை மீதான அவரின் காதலையும் ஈடுபாட்டையும் நான் கண்டுகொண்டேன். அதன் பிறகு, மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்தம் பேட்டிகளையும் இனிய நந்தவனத்தில் வெளியிட்டு ழமான இலக்கிய உறவுக்குக் கைகொடுத்தார். அதற்குச் சான்றாக இதோ, கடல் கடந்து இவரின் ஹைக்கூ நந்தவனத்தின் அழகை அள்ளிப் பருக வந்துள்ளேன்.

இவரின் ஹைக்கூ நந்தவனத்தில் பூத்து மணம் பரப்பும் மலர்கள் பல நிறங்களில் உள்ளன. அவற்றில் இயற்கையோடு கைகுலுக்கும் துளிப்பாக்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. சங்க காலம் தொடங்கி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்த நாம் அதைப் புறக்கணித்துவிட்டு நவீன வாழ்வுக்குள் நம்மை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறகு முளைக்குமா?
பறிக்க சை
நட்சத்திரப் பூக்கள்

குடிசைக்குள்ளும்
மெர்குரி வெளிச்சம்
முழுமதி

‘நிலவுக்கு நேரம் வைத்து உறக்கம் கொள்க’ என்றார் வைரமுத்து. இங்கே வறுமைக்கு வாழ்வைத் தந்துவிட்டவர்களுக்கு இயற்கையை இரசிக்க நேரமேது? ஆனாலும், குடிசைக்குள்ளும் நிலவு எட்டிப்பார்க்கிறது. அவர்களின் இருண்ட வாழ்விலும் ஒளி பாய்ச்சுகிறது. நட்சத்திரங்ளை ரசிக்கும் கவிஞனின் மனக் கை அவற்றைப் பறிக்கும் ஆவலில் நீளுகிறது. கருத்தைச் சொல்வது மட்டுமன்று. தன் மனத்தளவில் அரும்பும் உணர்வுகளுக்கும் வடிவம் தந்து வாசகர் பந்திக்கு அனுப்பும் வேலையை ஹைக்கூ செய்கிறது.

ஹைக்கூ உலகம் அன்புலகம். தினையளவும் திணை வேறுபாடு காட்டாத அதிசய உலகம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகத் தமிழ்க்கவிதைச் சூழலில் அதிகம் பாடப்படாத எளிய உயிர்கள் ஹைக்கூ கவிதைகளில் முக்கியப் பாடுபொருள்களாகின்றன. தவளை, காகம், எறும்பு, நத்தை, பல்லி, வண்ணத்துப்பூச்சி போன்ற எளிய உயிர்கள் அற்பமானவை என ஒதுக்கப்படாமல் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. நம் மனக்குளத்திலும் கல்லெறிந்து அலைகளை எழுப்புகின்றன. சந்திரசேகரனும் மனந்தோய்ந்து அவற்றைப் பாடுகிறார்.

சிறகிருந்தும்
பறக்க முடியாமல்
ஜோசியக் கிளி

நீரைத் தேக்காதீர்கள்
சுதந்திரமாய் வாழட்டும்
மீன்கள்

சூரியனே
கொஞ்சம் பொறு
தாமரைக்குள் வண்டு

வாழட்டும்
விட்டில் பூச்சிகள்
எரியாத விளக்கு

ஹைக்கூவின் மிக முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வையாகும். அதன் அடிப்படையை ஓரளவுக்காவது புரிந்துகொண்டால்தான் ஹைக்கூவின் ஆழங்களை அடையாளம் காணமுடியும். இந்த உலகத்தின் எல்லாப் படைப்புகளையும் புழுவோ பூச்சியோ மனிதனோ ஒவ்வொன்றையும் ஒரே வயிற்றின் உடன் பிறப்புகளாக, உயர்வு தாழ்வில்லாமல் ஜென் பார்க்கிறது. எளிய உயிர்களைச் சக உயிரிகளாய்க் காணும் மனநிலையை ஹைக்கூ கற்றுத் தருகிறது. இதனால்தான் மேற்காணும் ஹைக்கூக்களில் சந்திரசேகரன் கூண்டில் அடைபட்ட கிளிக்காக, மீன்களுக்காக, வண்டுக்காக, விட்டில் பூச்சிகளுக்காக மனம் இரங்குகிறார்.

காய்ந்த நிலம்
உணவு தேடும் எலிகள்
உணவாய் விவசாய்க்கு..

உணவு தேடும் எலியே விவசாயிக்கு உணவாகும் கொடுமை இந்தத் துளிப்பாவில் பதிவாகியுள்ளது. இங்கே எளிய உயிர்க்கு மட்டுமன்று. வறுமையின் பிடியில் சிக்குண்ட ஏழைக்கும் இதயம் கசிகிறார் சந்திரசேகரன்.

சமுதாய அவலங்களுக்கும் ஹைக்கூ காது கொடுக்கிறது. ஆனால், அவற்றை நேராகச் சுட்டிக்காட்டுவதோ, தீர்வு காண முயல்வதோ ஹைக்கூவில் இல்லை. ‘நெம்புகோல் கவிதைகளைத் தருவோம் என்னும் அறிவிப்போ புரட்சிக்கு அழைக்கும் அறைகூவலோ அரசியல் வாடையோ போர் நிகழ்ச்சியோ எதுவுமில்லை’ என்பார் முனைவர் நிர்மலா சுரேஷ். இந்தத் தொகுப்பின் கவிதைகளில் சந்திரசேகரனின் சமுதாயப் பார்வை மிக மென்மையாக இழையோடியிருப்பதைக் காண்கிறோம்.

யார்யாரோ எச்சில்படுத்த
பசியாறினான் சிறுவன்
குப்பைத் தொட்டி

வண்ணத்துப்பூச்சியே
என் வீட்டோரம் வராதே
கைம்பெண் அக்காள்

என்னதான் இன்றைய சமுதாயம் நவீன வாழ்க்கைக்குள் நகர்ந்துகொண்டிருந்தாலும் குப்பைத்தொட்டியில் வீசப்படும் உணவுக்குக் காத்திருக்கும் அவலம் இன்னும் தீரவில்லையே என்ற ஆதங்கத்தை முதல் ஹைக்கூ அறிவிக்கிறது. இரண்டாம் ஹைக்கூவில் வாழ்வில் துணையிழந்தவள் அலங்காரத்தையும் இழந்து நிற்கும் கொடுமை வண்ணத்துப்பூச்சியை வீட்டோரம் வராமல் வழிமறிப்பதில் வெளிப்படுகிறது. வண்ணங்களை ஆடையாய் அணிந்துள்ள வண்ணத்துப்பூச்சி கைம்பெண் மனத்தில் காயங்களை ஏற்படுத்தலாம் என்ற தவிப்பை உணர முடிகிறது.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் காதல் உணர்வுளைக் காண்பது மிக அரிது. நால்வகைப் பருவங்களின் மாற்றங்களையும் அந்த மாற்றங்கள் மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அதிகம் காணலாம். ஆனால், தமிழில் ஆண் - பெண் காதலுணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாக ஹைக்கூ திகழ்கிறது. இந்த ஹைக்கூ நந்தவனத்திலும் சில காதல் பூக்கள் மலர்ந்துள்ளன.

அவள் சொல்லும்போது
அழகாய் இருந்தது
என் பெயர்

கல்லறையில்
என் காதலி
மெல்ல நடங்கள்

என்னவளின்
பாதச் சுவடு
அலையே நில்

குறுகிய வடிவத்தில் ஒவ்வொரு காதல் காட்சியும் முழுமையற்றதாகத் தோன்றும். படைப்பாளன் வாசகனின் மனக்குளத்தில் கல்லெறிகிறான். வாசகன் தன்னுள் எழும் அலைகளைக்கொண்டு படைப்பாளனின் மன நிலையை எட்டிப்பிடிக்கிறான். அப்பொழுதுதான் காதலியின் வாய் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லிலும் கசியும் இன்பத்தை உணர முடியும். காதலி இறந்தாலும் அவள் மீது கொண்ட அன்பு குறையாத மனநிலையை அறிய முடியும். காதலியின் பாதச்சுவடுகளை அலைகள் அழிக்குமோ என்ற இதயத் தவிப்பை உணர முடியும்

ஹைக்கூவின் பார்வை மேலோட்டமானதோ பொதுவானதோ அல்ல. ஏதாவதொரு நிகழ்வை, அனுபவத்தை கூர்ந்து நோக்கிய பார்வையாக உள்ளது. ஒரு பரந்த காட்சியிலிருந்து ஒரு குவிந்த காட்சிக்கு நிழற்படக் கருவியைப்போல் நம்மை அழைத்துச் செல்லும்.

காயத்தின் வலியை
யார் அறிவார்?
பூப்பறித்த காம்புகள்

அத்தகைய கூர்ந்து பார்க்கும் பார்வைக்குத்தான் பூப்பறிக்கப்பட்ட காம்பும் தெரியும். அதன் வேதனையையும் உணர முடியும். இப்படிப் பார்க்கத் தெரிந்தால் நாமும் ஹைக்கூவின் காதலர்களாகி அதன் அழகை ராதிப்போம்.

சந்திரசேகரனின் ஹைக்கூ நந்தவனத்தில் சில மலர்களில் மணம் குறைந்தாலும் பல மலர்களில் கமழும் இனிய மணம் இதயத்தைக் கொள்ளையடிக்கின்றது.

இந்த ஹைக்கூ பயணத்தில் இன்னும் சில இலக்குகளை எட்டிப்பிடிக்க இனிய நண்பர் சந்திரசேகரனை வாழ்த்தியனுப்புகிறேன்.

2 comments: