1.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தற்பொழுது சிற்றிதழ்கள் முளைவிடும் காலம் என்று துணிந்து கூறலாம். நம் நாட்டில் இதுவரைக்கும் நூற்றுக்கும் குறையாத இதழ்கள் வலம் வந்து கால நதியில் கலந்து காணாமல் போய்விட்டன. அவற்றிலிருந்து மாறுபட்டுத் தீவிர இலக்கியத் தாகத்தோடு புதிய சிற்றிதழ்கள் வெளிவருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
சீ.அருண் ‘அருவி’ கவிதை இதழைச் சில ண்டுகள் வெளியிட்டு வந்தார். ‘முகம்’ அறிமுக இதழ் வெளிவந்து நின்றுபோனது. ‘காதல்’ சில இதழ்களோடு காணாமல் போனது. ம.நவீனின் ‘வல்லினம்’ இதழ் கலை, இலக்கிய இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. கெடா கே. பாலமுருகன் ‘அநங்கம்’ இதழை வெளியிட்டு வருகிறார். இந்த ண்டு தொடக்கம் முதல் ஜாசின் கவிஞர் ஏ.தேவராஜன் ‘மௌனம்’ எனும் தற்காலக் கவிதைக்கான சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.
சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கியப் படைப்புகளால் நம் நாட்டு நாள், வார, மாத ஏடுகளை நீண்ட காலம் அலங்கரித்து வருபவர் ஏ. தேவராஜன். அதோடு, பாடல், பலகுரல் வண்ணம், நிகழ்ச்சி அறிவிப்புப் பணி, ஓவியம் என பன்முகம் கொண்டவர். இவரின் தொடர்ச்சியான எழுத்துத் தவம் நமக்கு வியப்பைத் தருவதாகும். கவிதை உலகில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்பவர். இவரின் தீவிர இலக்கிய ஈடுபாட்டின் நீட்சியாக இந்தக் கவிதை இதழ் முயற்சியைக் காண்கிறேன்.
‘நினைத்த நேரம் வெளிவரும் இதழ்’ என்ற அறிவிப்போடு 5 இதழ்கள் வந்துள்ளன. அனைத்தும் நம்பிக்கை தருவனவாக உள்ளன. முக்கியப் படைப்பாளிகளான பலரின் கவிதைகளைத் திரட்டி அச்சேற்றியிருப்பதில் தேவராஜனின் உழைப்பு தெரிகிறது. கவிதைகளை நேர்த்தியாகத் தொகுத்துப் பக்க அமைப்பிலும் கவனம் செலுத்தி ஏற்ற ஓவியங்கள், படங்களை இணைத்துக் காண்பாரை ஈர்க்கும் வண்ணம் இதழை உருவாக்கியிருக்கிறார்.
இதழின் பல கவிதைகள் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது உறுதி. நவீன வாழ்வின் சிதைவுகளை, விளிம்பு மனிதர்களின் வேதனையை, நிகழ்கால சமுதாய நடப்பை, மனத்தில் மக்கி மடிந்துபோகும் உணர்வுகளின் பதிவை, தொலைதூரத்தில் கேட்கும் நம்மினத்தின் இன்னல்களைக் கலைமுலாம் பூசி நம் கையில் தந்துவிடுகின்றன பல கவிதைகள். நல்ல கவிதைகளைத் தேடிப் படிக்க முடியாத வாசகனுக்குப் பயன் தரும் வகையில் மொழிபெயர்ப்புக் கவிதைகள், எடுத்துக்காட்டுக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் தீவிர இலக்கிய வளர்ச்சிக்குச் சிற்றிதழ்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இங்கேயும் தீவிர இலக்கியம் முகம் காட்டத் தொடங்கிவிட்டது. கவிதை குறித்த உரையாடல்களை, விமர்சனங்களை, சிந்தனைகளை முன்வைக்க ‘மௌனம்’ களம் அமைத்துத் தருகிறது. அணியெனும் பிணி இல்லாமல் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். கவிதையை நேசிக்கும் கவிதைக் காதலர்களையும் வாசகர்களையும் தம் கவிதை அணியில் இணைப்பதில் தேவராஜன் வெற்றிபெற்றுள்ளார்.
2.
இவ்வேளையில் ‘மௌனம்’ எப்படி உருவானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த ண்டு டிசம்பர் மாதம் சிரியர் பணி நிமித்தமாக தேவராஜனும் நானும் பினாங்கு மாநிலத்தில் ஒரு வாரம் தங்கும் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம். அப்பொழுது கவிதைப் போக்குக் குறித்தும் அதற்கு ஏடுகளில் கிடைக்கும் மரியாதை குறித்தும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
நீண்ட காலமாக கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவரும் தேவராஜனின் மனமெங்கும் தங்கம் நிறைந்திருப்பதை அன்று கண்டேன். புதிய முயற்சிகளுக்கு ஏடுகளில் இடமில்லை என்பதோடு புரியாத கவிதைகள் என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதை வருத்தத்தோடு கூறினார். கவிதை குறித்த சிந்தனைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏடுகளில் இடமில்லை என்பதையும் இருவரும் ஒப்புக்கொண்டோம். இதற்கு வழிகாண வேண்டும் என்ற சிந்தனை வயப்பட்டவராக தேவராஜன் அந்த ஒரு வாரமும் இருந்ததாக எனக்கு நினைவு.
பணி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் விடைபெற்றபோது, தேவராஜன் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். உடனே ஒரு கவிதை இதழைத் தொடங்கவேண்டும். கவிதைத் துறைக்கு நிலையான ஒரு பங்களிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவோடு பேருந்தில் ஏறினார். சொன்னபடியே மூன்றாவது வாரத்தில் 48 பக்கங்களில் முதல் ‘மௌனம்’ இதழ் என்னைத் தேடி வந்து வியப்பில் ழ்த்தியது. பினாங்கு மாநிலத்தில் மனத்தில் விழுந்த விதை, ஜோகூர் மண்ணில் முளைவிட்டுக் கிளை விட்டது.
3.
இதுவரை வெளிவந்துள்ள 5 இதழ்களையும் ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கையில் தேவராஜனின் அசுர உழைப்பைப் பார்க்க முடிகிறது. ‘நயனம்’ சிரியர் திரு. இராஜகுமாரன் கேட்டதுபோல் “எப்படி இவரால் இத்தனைக் கவிதைகளைத் திரட்ட முடிந்தது?” என நானும் கேட்க விழைகிறேன். விடாப்பிடியாக இருந்து பலரிடம் கவிதைகளைக் கேட்டு வாங்கி அச்சு வாகனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஏடுகளில் சராசரி கவிதைகள் எழுதும் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் தங்களின் மாறுபட்ட கவிதைகளை எழுதியிருப்பது ‘மௌன’த்தின் வெற்றியாகும். வழக்கமான கவிதைகளை விடுத்து மௌனத்தின் போக்கும் நோக்கும் உணர்ந்து கவிதைகளை வழங்கியுள்ளனர்.
புதிய படைப்பாளிகளின் வரவும் ‘மௌனம்’ இதழுக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது. அதே வேளையில் மூத்த படைப்பாளிகளையும் ஒதுக்கிவிடாமல் அவர்களையும் அரவணைத்து மௌனத்தில் பாகுபாடு இல்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார். சிலர் புனைபெயர்களில் உலவிக்கொண்டு முகங்காட்டாமல் கவிதைகளால் பேசியுள்ளனர்.
‘புரிதல்’ மௌனத்தில் அழுத்தமான முத்திரையைப் பத்திக்கும் பகுதி. இதுவரை வாசக மனங்களுக்குப் புலப்படாத படைப்பாளனின் உள்முகத்தைத் திரை விலக்கிக் காட்டும் பகுதி. வெறும் எழுத்துகளால் பக்கங்களை நிரப்பாமல் மாறுபட்ட ஓவியங்களால் அழகு செய்து வாசகர் மனங்களைக் கவிதைகளுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு மௌனத்தின் தனிச் சிறப்பாகும்.
தேவராஜன் எனும் மிகப் பொருத்தமான கவிஞனின் மேற்பார்வையில் 5 இதழ்களிலும் ‘மௌனம்’ உரக்கப் பேசியிருக்கிறது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் சிந்திக் கிடக்கும் அவனின் வியர்வைத் துளிகளை அவற்றின் ஊடே பயணம் போகும் நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர முடியும்.
No comments:
Post a Comment