நீங்கள் வராத நாளில்
நான் மட்டும் சென்றிருந்தேன்அந்தக் கடற்கரைக்கு
நம் அரட்டைகள் இல்லாத
அந்தக் கணங்களில்
என்னுடன் உரக்கப் பேசியது காற்று
நம் சிரிப்பலைகளில் தவறவிட்ட
அலைகளின் செல்லச் சிணுங்கல்கள்
காதுமடல்களை நனைத்தன
கால் விரல் இடுக்குகளில் மறைந்து
என்னுடன் பயணிக்க விழைந்தன
மண் துகள்கள்
தொலைத்தூரத்து மஞ்சள் வானத்திலிருந்து
குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கியது
அந்திச் சூரியன்
நம்மைப்போல கூட்டமாகக் கதைபேசி
எங்கோ அவசரமாகப் பயணப்பட்டன
மேகங்கள்
நாம் இதுவரை காணத்தவறிய
சின்னஞ் சிறு நண்டுகள்
மணலில் விளையாடக் கண்டேன்
நாம் பேசியிருந்த தருணங்களில்
வேகங்காட்டிய மணித்துளிகள்
மெல்ல மெல்ல நகர்ந்தன
வினாடிகளாய்....
நீங்களும் போய் வாருங்களேன்
அந்தக் கடற்கரைக்கு ஒருநாள்
தனியாக..
No comments:
Post a Comment