நம் குரல்

Thursday, February 18, 2010

நிதர்சனங்கள் (சிறுகதை)


அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு பக்கத்தில் அடங்குமாறு தொகுத்துத் தரவேண்டும். ஏற்கெனவே எடுத்த பேட்டிகளைச் செப்பமிட்டு ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் பார்வைக்கு அனுப்பவேண்டும். இடையிடையே செய்திகளின் பிழை திருத்தம் வேறு. ஒற்றுப்பிழைகள் மலிந்து வருவதாகத் தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம். வாராந்திர பணியாளர்கள் கூட்டத்தில் சிரியர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார். எல்லாரும் தலையை ஆட்டுகிறோம். ஏட்டில் எப்படியாவது பிழைகள் முகங்காட்டிவிடுகின்றன.

அலுவலகம் மந்தகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. மூன்று மணியானால்தான் பரபரப்புக் காய்ச்சல் பரவத் தொடங்கும். வெளியூர் நிருபர்கள் மின்னஞ்சலில் அனுப்பும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. கணினியில் நுழைந்து சங்கச் செய்திகளை மோப்பம் பிடித்தேன். “பாலு சார், பெரிசு கூப்பிடுறாரு. போங்க” எங்கள் அலுவலகத்தின் அழகு நங்கை கோனிஷமா (இப்படியெல்லாம் பெயர் வைக்க உட்கார்ந்து யோசிப்பானுங்களோ?) என் பக்கம் வந்து லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் சிணுங்கினார்.

ஆசிரியர் அறைக்குள் நுழைந்தேன். அவரின் அனுபவத்துக்கும் உருவத்துக்கும் எங்களிடையே அன்போடு உலவும் பெயர்தான் பெரிசு. அறை முழுக்க நாளிதழ்கள், கோப்புகள், புத்தகங்கள். கொஞ்சம் அடுக்கிவைத்தால் அறையே அழகாக இருக்கும் என்று தோன்றியது. அன்றைய ஆங்கில நாளிதழ் அவர் மேசையில் விரிந்து கிடந்தது. “வாங்க பாலு. இத படிச்சி பாருங்க. கண்பார்வை இல்லாதவங்க பத்தி இதிலே வந்திருக்கு. வித்தியாசமான கட்டுரை. இந்த மாதிரி படைப்பு நம்ம பத்திரிகையில வரணும். வாசகர்ங்க இதைத்தான் எதிர்ப்பார்க்குறாங்க. கொஞ்சம் கவித்துவமா எழுத நீங்கதான் சரி. உடனே புறப்படுங்க. பேட்டியோடு வாங்க.”

“சார், சங்கச் செய்திகள இன்னும் முடிக்கல. நாளைக்கு போகட்டுமா ”
“அதான் வேதா இருக்கிறாரே. அவரு பார்த்துக்குவாரு. நீங்க புறப்படுங்க”

பெரிசு சொன்னால் சொன்னதுதான். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேட்டிக்கான ஏற்பாட்டைச் செய்தேன். அலுவலகத்துப் பக்கத்திலுள்ள ஒட்டுக்கடையில் சுவையான தேநீரில் தாகசாந்தி பெற்றுக் காரில் புறப்பட்டுவிட்டேன்.

எப்போது போனாலும் பரபரப்பு குறையாத பிரிக்பீல்ட்ஸ் பகுதி. அந்தத் திங்கட்கிழமை மாலையில் சாலைகளில் நிறைந்துபோகும் வாகனங்களாலும் மனிதர்களாலும் கடைகளில் கேட்கும் செவிப்பறைக் கிழிக்கும் பாடல்களாலும் கலகலத்துக்கொண்டிருந்தது. பரபரப்பு, மனிதர்களின் ஆடையாயிருந்து இப்பொழுது அங்கமாக மாறிவிட்டதா? அமைதியான வாழ்க்கைக்கு மீள அவரவரும் ஆதிமனிதன் வாழ்க்கையில் மூழ்கியெழ வேண்டுமோ? இதிலே கண் பார்வையற்றவர்களின் நிலை என்ன? கடைகளுக்கு மேல் இருந்த மின்கம்பிகளில் பறவைகள் அமர்ந்து மனிதர்களின் வேகத்தை இரசித்துக்கொண்டிருந்தன. பிரிக்பீல்ட்ஸ் கடந்து அதன் பின்னால் நீளும் சாலையில் நுழைந்தேன். கண்பார்வையற்றோர் சங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள அடுக்குமாடியின் கீழே காரை நிறுத்தினேன். ஐந்தாவது மாடிக்கு லிப்ட்டில் சென்றடைந்து வீட்டின் கதவைத் தட்டினேன்.

கதவைத் திறந்துகொண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் ஊன்றுகோலைத் தரையில் தட்டியவாறு வெளியே வந்தார். கலைந்த தலைமுடி. இடுங்கிய கண்கள். சவரம் செய்யப்படாமல் தாடையில் படர்ந்த வெள்ளைத்தாடி. மெலிந்த தேகம். முகத்தில் அப்பிய மெல்லிய சோகம்.

“வணக்கங்க. நான் பாலு. தமிழ்ப்பத்திரிகையிலிருந்து பேட்டிக்காக வரேன். இங்க டேவிட்...?”

“வாங்க தம்பி. டேவிட் நான்தான். மொத போன்ல கூப்பிட்டது நீங்கதானா? இன்னைக்கு ஒடம்புக்கு முடியல. காலையில இருந்து கால் வலி. அதான் வேலைக்கு போகல. உள்ள வாங்க”

உள்ளே சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். என் முன்னே அவரும் அமர்ந்துகொண்டார். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு. அலங்காரங்களும் பொருள்களும் குறைவாகக் காணப்பட்டன. சுவரில் இருந்த தமிழ் நாள்காட்டியில் தலைவர் ஒருவர் மாலையோடு சிரித்துக்கொண்டிருந்தார். யாரோ வரைந்து பிரேமிட்ட இரண்டு அழகான ஓவியங்களும் இருந்தன. அந்த ஓவியங்கள் யார் பார்த்து இரசிப்பதற்காக?

“ எங்க வேலை செய்றீங்க? ஏதாவது கம்பனியிலா?”

“என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க. நாங்க ஏன் கையகட்டி ஒருத்தங்கிட்ட வேலை செய்யணும்? நாங்களே சுயமா ஒழைக்கிறோம். நல்லா இருக்கோம். கொஞ்சம் இருங்க. எங்க தலைவரும் தோழர்களும் வேல முடிஞ்சி வருவாங்க. அவங்ககிட்ட விலாவாரியா கேளுங்க?” பிசிறில்லாத தெளிவான குரல். நான் அமர்ந்த இடத்தை அனுமானித்து வெறித்து நோக்கும் தீர்க்கமான பார்வை.

காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் டேவிட் சொன்ன தலைவரும் தோழர்களும் வந்தனர். அவர்களில் ஒரு மலாய்த் தோழியும் இருந்தார். எல்லார் கைகளிலும் ஊன்றுகோல். ‘இழுக்கல் உடையுழி ஊற்றுகோல்’ - வழுக்கல் நிலத்தில் நடக்க மனிதருக்கு ஊன்றுகோல் உதவும் என்று திருவள்ளுவர் பாடினார். அவர்களுக்கோ ஊன்றுகோல் உடலின் அவயமாக ஆகியிருப்பதைக் கண்டேன். “இவரு என் அண்ணன் மைக்கல். இவரு மணியம், இவரு சியா சூன் பாட், அவரு கணபதி, அவங்க சாலினா. இதுதான் எங்க குடும்பம். இந்த புளோக்லதான் எல்லாரும் இருக்கோம். இன்னும் நாலு பேரு வேல முடிஞ்சி வரல. அண்ண, இவரு பாலு. தமிழ்ப்பத்திரிகையில இருந்து பேட்டிக்காக வந்திருக்காரு. நம்மல பேட்டி கண்டு போடணும்மா” டேவிட் அறிமுகப்படுத்தினார். எல்லாரும் என்னைச் சுற்றி அமர்ந்துகொண்டார்கள்.

“வணக்கங்க. எதுக்காக எங்கள பேட்டி காணப்போறீங்க? நாங்க ஒன்னும் பெரிசா சாதிக்கலையே. ஏதோ கண் பார்வை இழந்த பத்துபேரும் ஒத்துமையா இங்க இருக்கோம். இத சாதனையா நெனக்கிறீங்களா?” மைக்கல் எனக்கு வித்தியாசமான தலைவராகத் தெரிந்தார். பத்திரிகையாளனாக எத்தனையோ தலைவர்களைப் பார்த்துவிட்டேன். பட்டம், பதவி, மாலை, பொன்னாடை, பரிவாரம் என பரபரப்பாக வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தலைவர்கள்.

“இதுவும் சாதனைதான். இங்க பத்துபேரும் மதம், இனம்னு எந்த வேறுபாடும் பார்க்காம ஒன்னா இருப்பதும் சாதனைதான். உங்க வாழ்க்கை மத்தவங்களுக்கு பாடமா அமையும். வெளிய போய் பார்த்தா ஒன்னா இருக்கிறோம்னு சொல்லிகிட்டு தனித்தனியா பிரிஞ்சிபோய் கிடக்கிறோம். நல்லா நடிக்கிறோம். எனவே உங்க பேட்டி முக்கியம்னு நெனக்கிறேன்.” சொல்லிவிட்டு மைக்கல் முகத்தை ஏறிட்டேன்.

அங்கு எந்தச் சலனத்தையும் காணமுடியவில்லை. ஏதோ சிந்திக்கிறார் என்று தெரிந்தது. அதுதான் சமயம். நான் கேள்விகளோடு தயாரானேன். “முதல்ல தண்ணி சாப்பிடுங்க. டேவிட் எல்லாருக்கும் தண்ணி கொண்டு வா.” சுடச்சுட தேநீர் தொண்டையை நனைத்தது. பதிவுநாடாவை இயக்கினேன்.

“உங்க பின்னணி பத்தி கொஞ்சம் சொல்லுங்க, மைக்கல்”

“செந்தூல் பகுதியிலதான் நான் பிறந்து வளர்ந்தேன். எங்க அப்பா அம்மா பலசரக்கு கடை வச்சிருந்தாங்க. எட்டு வயசா இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா பார்வை குறைஞ்சிடுச்சு. எங்க பரம்பரையில இந்த மாதிரி இருந்ததா அப்பா சொன்னாரு. இதோ என் தம்பி டேவிட்டுக்கும் அதே நிலமை.”

“பார்வை குறைஞ்சதும் உங்களுக்கு மனதளவில ரொம்ப பாதிப்பு ஏற்பட்டிருக்குமே. எப்படி தாங்கிக்கிட்டீங்க?”

“அத வார்த்தயால சொல்ல முடியாது. ஸ்கூல் விட்டதும் கூட்டளிங்களோட சொதந்திரமா சுத்தித் திரிவேன். எத்தனையோ இயற்கை காட்சிகள கண்டு ரசிச்சிருக்கேன். அப்பவே ஓவியம்கூட வரைவேன். இப்ப அதெல்லாம் எப்போவாது கனவுல வருது. நான் ரொம்ப படிக்கணும்னு ஆசப்பட்டேன். அது முடியாம போச்சின்னுதான் வருத்தமா இருக்கு. பார்வை இருந்திருந்தா பெத்தவங்களுக்கு என் கடமையை நெறைவா செஞ்சிருப்பேன். அதுவும் முடியாம போச்சு” விரக்தியும் வேதனையும் கலந்த சொற்கள் பெருமூச்சோடு வெளிப்பட்டன. மற்றவர்கள் தங்கள் தலைவர் கூறுவதை உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

“அப்ப உங்க படிப்பு அதோட நின்னு போச்சா?’

“கண்பார்வை இல்லாதங்க பள்ளியில சில வருசம் படிச்சேன். அப்புறம் பிரிக்பீல்ட்ஸ் கண்பார்வையற்றோர் சங்கத்தில சேர்ந்தேன். கூடை பின்னுவது, கைவினைப்பொருளு செய்றதுனு கத்துக்கிட்டேன். இருவது வயசுல இந்தப் பக்கம் வந்தேன். இதோ இருவத்தஞ்சு வருசம் ஓடிருச்சு. ஒவ்வொருத்தரா வந்து பிளாட்ல என்னோட சேர்ந்தாங்க. இப்ப பத்து பேரா குடும்பம் பெருசாயிடுச்சு.”

“இப்ப கூடை, கைவினைப்பொருளு விக்கிற வேலதான் செய்றீங்களா?”

“அத செய்து பார்த்தோம். வருமானம் பத்தல. இப்ப பதினைந்து வருசமா டிஷ்யூ பேப்பரு விக்கிறோம். ஒரு கம்பனி ஸ்போன்சர் பண்றாங்க. அதனால ஓரளவுக்கு போதுமான வருமானம் கிடைக்குது. பட்டினி கிடக்குற நிலமயில்லாம் இங்க இல்ல. நம்புங்க” குரலில் நம்பிக்கை இழையோடியது.

“டிஷ்யூ பேப்பரு வித்தா ஒரு மாசத்துக்கு எவ்வளவு கிடைக்கும்?”

“கொறஞ்சது ஆளுக்கு ஐந்நூறு வெள்ளி கிடைக்கிது. அப்புறம் சமூகநல இலாகாவுல கொஞ்சம் பணம் தராங்க. அதுபோதும் தம்பி. நாங்க யாரு கையையும் எதிர்பார்த்து வாழல பாருங்க. அதுதானே முக்கியம்.” நம்பிக்கை உற்சாக நதியாக ரவாரித்தது.

“நீங்க எதிர்நோக்குற பிரச்சனை ஏதும் உண்டா?”

“நெறைய இருக்கு தம்பி. கடைவீதி ஓரமா நடந்துபோறது சிரமமா இருக்கு. மேடு பள்ளம், குண்டு குழியின்னு நாங்க படாதபாடு படறோம். முன்ன மாதிரி ரோட்ட தாண்ட முடியல. பல முற எக்ஸிடெண்ல மாட்டியிருக்கோம். அதவிட கொடும, டிஷ்யூ விக்கும்போது எங்க குவளையிலயிருந்து காச களவாடியிருட்டு போரானுங்க. களவாணிப் பசங்க” மைக்கல் கண்களைத் தேய்த்துக்கொண்டார். கோப ரேகைகள் அவர் முகத்தில் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது. அவரே தொடர்ந்தார்.

“அத விடுங்க. ஒரு அஞ்சி மாசத்துக்கு முந்தி நடந்த சம்பவம். இப்ப நெனச்சாலும் எங்க ஈரக்கொலையே நடுங்குது. எப்பவும் ஆளுக்கொரு பக்கமாதான் டிஷ்யூ பேப்பர விக்கப்போவோம். ஒரு நாளு ராத்திரி மணி எட்டாச்சு. நாங்கல்லாம் வந்திட்டோம். சாலினாவ காணோம். நாங்க பதறிப்போயிட்டோம். இந்த பிரிக்பீல்ட்ஸ் பகுதியையே ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் அலசிட்டோம். கிடைக்கல.” சாலினா என்று தன் பெயர் உச்சரிக்கப்பட்டதும் அந்த மலாய்க்கார மாது எங்கள் பக்கமாய்த் தலையைத் திருப்பினார்.

“அப்புறம் மறுநாளு இங்க கண்பார்வையற்றோர் சங்க ஆபிசுக்குப் போயி விசாரிச்சோம். அப்பதான் தெரிஞ்சது. சாலினா பிச்ச எடுக்குதுன்னு போலிசுல புடிச்சுக்குட்டு போயிட்டாங்களாம். ஒரு நாள் முழுக்க சாலினா ஜெயில்ல இருந்து அவதிபட்டு அழுது துடிச்சிருக்கு. இன்னைக்கும் அந்த பயம் போகல அதுக்கு. நீங்களே சொல்லுங்க தம்பி. நாங்க டிஷ்யூதான விக்கிறோம். பிச்சையா எடுக்கிறோம்?” தங்களோடு வசிக்கும் ஒரு மலாய்க்காரப் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் இவர்கள் மனத்தில் எப்படி மாறாத வடுக்களாக மாறிப்போனது?

“இஞ்சே, நான் பத்து வருசத்துக்கு முந்தி கண்பார்வையற்றோர் சங்கத்துக்கு பயிச்சிக்கு வந்தேன். அப்ப இருந்து மைக்கல்தான் எங்களுக்கு வேல வாங்கி தந்து தேவையான உதவிகள செஞ்சு கடவுள் மாதிரி கூடச் இருந்து கவனிக்குறாரு. எங்களுக்கு நல்ல தலைவரு கிடச்சிருக்காரு. அதலாலதான் நாங்க அவருக்கு கீழ ஒத்துமையா இருக்கோம்.” சாலினா எழுந்து வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு மலாய்மொழியில் நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

“அரசாங்கம், பொதுமக்கள் இவங்ககிட்டு என்ன எதிர்பார்க்குறீங்க மைக்கல்?”

“கண் தெரியலங்கிறது ஒரு நோய் இல்ல. அத எல்லாரும் புரிஞ்சிக்கணும். பக்கத்துல கையில ஒருத்தன் தடியோட தரைய தட்டிக்கிட்டு வந்தானா அவன வெறுக்காதீங்க. அவன் சடம் இல்ல. சக மனிதனா பாருங்க. கொஞ்சம் அன்பா பேசுங்க. அரசாங்கம் நெனச்சா பஸ் போக்குவரத்துல எங்களுக்கு இன்னும் வசதிய ஏற்படுத்தலாம். இவ்வளவு பெரிய சிட்டியில எங்களுக்கு நல்ல வேல வாய்ப்ப ஏற்படுத்தணும்.” தீர்க்கமான தீர்மானமாய் மைக்கல் தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டினார். மனம் திறந்து மணியம், கணபதி, சியா சூன் பாட் ஆகிய மற்றவர்களும் கொஞ்சநேரம் என்னுடன் பேசினார்கள். எல்லாவற்றையும் பதிவுசெய்தேன். அனைவரையும் நிற்கச்சொல்லிக் குழுப்படம் எடுத்தேன். மணி ஆறாகிவிட்டது. அனைவரிடமும் கைகுலுக்கி விடைபெற்றேன்.

அப்பொழுது வெளியே சிலர் வந்து நிற்பது தெரிந்தது. கைகளில் பொதுத்தேர்தலுக்கான சுற்றறிக்கை. மைக்கல் வெளியில் சென்று அவர்களிடம் பேசினார். அறிக்கைகளை வாங்கிக்கொண்டார். “நம்ம தலை எழுத்த மாத்த முடியாதுங்க. ஆன நம்ம வருங்கால தலைமுறை நல்லா இருக்க ஏதாவது செய்யலாமே, என்னா சொல்றீங்க, நல்லா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாரும் மறக்காம வந்து ஓட்டு போடுங்க. அது ரொம்ப முக்கியங்க. சரிங்கலா?” அவர்களில் ஒருவர் உள்ளே எட்டிப்பார்த்துச் சொன்னார்.

அவர்கள் போனவுடன் மைக்கல் உள்ளே வந்தார்.
“நீங்களும் தேர்தல ஓட்டு போடுவீங்களா?”

“என்னா இப்படி கேக்குறீங்க? அது நம்ம உரிமை தம்பி. நாட்டுக்காக நம்ம கடமை. நான் மட்டும் இல்ல. இங்க அத்தன பேரையும் அழைச்சுக்கிட்டு போயி ஓட்டு போட வைக்குறது என் பொறுப்பு. சிலபேரு புரியாம ஓட்டு போடமாட்டோம்னு மல்லுக்கு நிப்பாங்க. அது சுத்த பைத்தியக்காரத்தனம். ஓட்டு போட்டாதான நமக்கு புடிச்ச திறமைசாலிங்களையும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுக்க முடியும்?”

“இங்க நீங்க பத்துபேரும் மதம், இனம், ஏற்றத்தாழ்வுன்னு இல்லாம ஒற்றுமையா, ஒருவருக்கொருவர் உதவிக்கிட்டு வாழ்றீங்க. வெளியில நாம எதிர்பார்க்கிற ஒற்றுமை இன்னும் கைகூடாத கனவா இருக்கே. எப்ப பாத்தாலும் இனங்களுக்கு இடையே சின்ன சின்ன சர்ச்ச இருந்துகிட்டே இருக்கு. இதற்கு என்ன காரணம்னு நெனக்கிறீங்க?” என்னையும் அறியாமல் என் மனத்தின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த உணர்வலைகள் அவிழ்ந்து கொண்டன.

“உங்க கேள்விக்கு விடைதான் எங்ககிட்டேயே இருக்க தம்பி. நாங்க பத்து பேரும் எப்படி ஒன்னா சேர்ந்தோம்? நாங்க பட்ட துன்பமும் துயரும்தானே எங்கள ஒன்னா ஒரு குடும்பமா ஆக்கிருக்கு. மத்தவங்க துயரத்த தாங்கிக்கிற தோளா ஒவ்வொருத்தரும் தயாரா இருக்கோம். இந்த நாட்டு சரித்திரத்த எடுத்து புரட்டிப்பாருங்க. அதுதானே நடந்துச்சு. அன்னைக்கி ஜப்பாங்காரனும் வெள்ளைக்காரனும் படுத்திய பாடு தாங்க முடியாம எல்லாரும் ஒன்னா ஒத்துமையா இருந்து சுதந்திரக்குப் போராடினோம். ஜெயிச்சோம். இன்னைக்கு என்னா ஆச்சு?”

“என்னா ஆச்சு?”

நாடு வளமாயிருச்சி. வெளியே போராட்டங்கள் குறைஞ்சி போச்சு. அதனால ஒவ்வொரு இனமும் ஒரு திசையில முகத்த திருப்பிகிட்டு தன் இனத்தை எப்படியாவது காப்பாத்திக் கரைசேர்க்க முனைப்பு காட்டுது. அது இயற்கை. தப்பில்ல. ஆனா பக்கத்துல இன்னொரு இனத்துக்காரன் அழுது புலம்பறது தெரியாம, அவன் துயரத்த கண்டும் காணாம, கிடைச்சத வாரி சுட்டிகிட்டு கிளம்பற மோசமான நிலம இருக்கே. அதை நெனச்சாதான் எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு.”

“இதற்கு வழி?”

“சுனாமி மாதிரி வெளியே இருந்து ஒரு துயரம் தாக்குனா அப்ப எல்லாரும் ஒன்னா சேர்வோம். மத்தவங்க துன்பத்த தாங்க தோள் கொடுக்க தயாரா இருப்போம். எல்லா இன தலைவர்களும் முதல்ல அவங்க இத உணருனும். அவங்க இனத்துக்கும் உணர்த்தனும்”

எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மைக்கலுக்குக் கண்பார்வை மட்டும்தான் இல்லை. அதற்குள் அலுவலத்திலிருந்து வேதா மூன்று முறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார். ‘பாலு, எங்க போய் தொலைஞ்ச? சீக்கிரம் வாயா. வேல தலைக்கு மேல இருக்கு’ அனைவரிடமும் மீண்டும் விடைபெற்றுக்கொண்டு அலுவலகத்துக்கு விரைந்தேன். என் வேலையை வேதாவிடம் தள்ளிவிட்டு என் மனத்தின் உணர்வுகளைப் பிசைந்துகொண்டிருந்த அன்றையப் பேட்டியை ஒரே மூச்சில் கணினியில் டைப் செய்து சிரியரிடம் அனுப்பினேன். மறுநாள் அழைத்தார். “பாலு, எதிர்பார்த்தபடி பேட்டி சிறப்பா வந்திருக்கு. பாராட்டுக்கள். ஆனா.. உங்க பேட்டி இன்னும் மூன்று வாரம் கழிச்சிதான் வரும். இங்க பாருங்க இந்த படங்களை. இது இரண்டு வாரங்களுக்கு போகும். இதற்குத்தான் இப்ப நீயூஸ் வேல்யூ அதிகம்.

பார்த்தேன். கோடம்பாக்கமே அணி திரண்டு வந்ததுபோல் சினிமா நடிகைகள் அரை குறையான இறுக்கமான ஆடைகளில் உள்ளூர் மேடையில் போடும் கிளுகிளுப்பான ஆட்டத்ததை எங்கள் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் மாதவன் பல கோணங்களில் தன் முழுத்திறமையைப் பயன்படுத்திப் பதிவு செய்திருந்தார்.

No comments:

Post a Comment